Monday, June 24, 2013

விழுது – 5 ஜுலைபிப் : சாதாரண மனிதரின் அசாதரண தியாகம்

பெருமானார் (ஸல்) வாழ்ந்த அரபு சமூகத்தில் பெருமானாரை ஆதரித்த முஸ்லீம்களானாலும் இஸ்லாத்தை எதிர்த்த குறைஷிகளானாலும் இரு பாலர்க்கும் ஓர் ஒற்றுமை உள்ளது. சாதாரண மனித ரின் பெயர் சிறியதாக இருந்தாலும் கூடவே நிச்சயம் அவரின் தந்தை பெயர், குலப் பெயர் என மிகப் பெரும் பட்டியலே இருக்கும். நமதூரில் அரசியல் கட்சி கூட்டங்களில் பேச்சை கேட்க வரும் பொதுமக்கள் குறைவாக இருந்தாலும் பேச்சாளர்கள் பெயர்கள் அதிகமாய் நோட்டீஸில் காணப்படுவதை போல் அவர்களது வளமை, பெருமை, குலச்சொத்து எல்லாம் இப்பரம்பரையும் கோத்திரமும் தான்.

இப்படிப்பட்ட ஒரு சமுதாயத்தில் ஒருவர் எவ்வித குலம், கோத்திரம் எதுவுமின்றி வாழ்ந்தால் ? அதுவும் இயற்பெயர் கூட வரலாற்றில் அறியப்படாமல் அவரின் அவலட்சணமான தோற்றத்தின் காரணமான பட்டப்பெயரை கொண்டே அழைக்கப்படும் ஒரு நபராக இருந்தால் ? நினைத்துப் பார்க்கவே முடியவில்லை அல்லவா. ஆம். நாம் அப்படிப்பட்ட ஒரு மனிதரை பற்றி தான் பார்க்க போகின்றோம். ஜுலைபிப் என்பது தான் அவர் பெயர்

ஜுல்பாப் என்றால் முந்தானை அல்லது தலை முக்காடு என்று பொருள்படும். அதிலிருந்து மருவிய ஜில்பாப் என்பதன் சற்றேறக்குறைய மொழிபெயர்ப்பு குட்டையான என்று அர்த்தப்படும். குட்டையன் எனும் பெயரோடு அழகற்றவன் என்று பொருள்படும் தமீம் எனும் உபரி பட்டப்பெயரும் ஜுலைபிப்புக்கு இருந்தது குறிப்பிடத்தக்கதுஇறையச்சத்தை பற்றியும் ரியாவை பற்றியும் சொற்பொழிவு ஆற்றினால் கூட அப்பேச்சை யாரும் வந்து பாராட்ட மாட்டார்களா என்று அங்கீகாரத்துக்கு ஏங்கி கொண்டிருக்கும் நமக்கு ஜுலைபிப்பாக இருப்பதன் கஷ்டம் புரிந்திருக்கும்

அவர் ஒரு அன்ஸார் என்பதை தவிர வேறெந்த குறிப்பும் இல்லை. குலமே பிரதானமாய கோத்திரமே சிறப்பாய் விளங்கும் ஒரு சமூகத்தில் குலமுமின்றி, கோத்திரமின்றி, சொந்தமாய் ஒரு பெயருமின்றி வாழ்வது எவ்வளவு கொடுமை ?

பொதுவாக நம்மில் இப்படிப்பட்ட பலவீனர்களாக உள்ளவர்கள் சக ஆண்கள் எப்போதும் நக்கலும் நையாண்டியும் செய்வார்கள் என்பதால் இயல்பாக மென்மையான மனம் படைத்த எதிர்பாலினரிடம் ஆறுதல் தேடுவதை போல் ஜுலைபிபும் தேடியிருப்பார் போலும். அபூ பர்ஸா எனும் மனிதர் தம் மனைவியிடத்தில் அவர்களுக்கு மத்தியில் எக்காரணத்தை கொண்டும் அனுமதிக்க கூடாது என்று எச்சரிக்கும் அளவு ஒரு ஜடப்பொருளாய் மதீனாவில் காலத்தை ஓட்டி கொண்டிருந்தார் ஜுலைபிப்.

இப்படியெல்லாம் இருந்த ஜுலைபிப்புக்கு நிச்சயம் திருமணம் முடிக்க ஆசை இருந்தாலும் யாரிடத்திலும் சென்று பெண் கேட்க நிச்சயம் துணிவு இருந்திருக்காது. மதீனாவில் அகிலத்தின் அருட்கொடை முஹம்மது (ஸல்) உருவாக்கிய மதீனத்து சமூகத்தில் இன, குல வேறுபாடுகள் குறைந்து ஈமான் ஒன்றே உறவுக்கான அளவுகோலாக மாறி போனாலும் அச்சமூகமும் ஆரம்ப நிலையிலேயே இருந்தது என்பதை நாம் மறந்து விடலாகாது.
கருணையின் நாயகம் (ஸல்) ஜுலைபிப்பிற்காக பெண் கேட்க போனார்கள், அதுவும் மதீனத்து பிரமுகர்கள் திருமணம் செய்ய போட்டி போடும் அழகான பெண்ணை. முதலில் நபிகள் நாயகம் (ஸல்) பெண் கேட்டு வந்திருக்கிறேன் என்று உரைத்ததை நபிகளார் தமக்காகவே கேட்டு வந்திருக்கிறார் என்று தப்பர்த்தம் செய்து கொண்ட பெண்ணின் தந்தை முகம் மலர்ந்தார். ஆனால் ஜுலைபிப்புக்காக பெண் கேட்டு வந்திருக்கிறேன் என்று பெருமானார் சொன்னவுடன் அதிர்ந்து போன அத்தந்தை தம் மனைவியிடம் ஆலோசனை செய்வதாக சொல்லி நழுவினார்.

அப்பெண்ணின் தாயாரிடம் விஷயத்தை சொன்ன போது ஜுலைபிப்புக்கு தன் மகளை கொடுப்பது பற்றி தாம் நினைத்து கூட பார்க்க முடியாது என்று பட்டவர்த்தனமாக சொல்லி  விட்டார். ஒரு வேளை அரும்பாடுபட்டு தாம் வளர்த்த பெண்ணை எப்படி பாழும் கிணற்றில் தெரிந்தே தள்ளுவது என்று நினைத்தாரோ என்னவோ. மனைவியின் கருத்தை நபிகளாரிடம் சொல்ல அத்தந்தை முன் சென்ற போது அப்பெண் தந்தையை இடைமறித்து விபரம் கேட்க பெற்றோர் முழு விபரத்தையும் ஒப்புவித்தனர்.

ஊரே வெறுத்து ஒதுக்கும் ஜுலைபிப்(ரலி) புக்கு தான் தம்மை நபிகள் நாயகம் (ஸல்) பெண் கேட்டு வந்துள்ளார்கள் என்று தெரிந்தும் அப்பெண் தெளிவாக சொன்னார் "இறைதூதரின் கோரிக்கையை நிறைவேற்றுவது தான் என் கடமை. நான் ஜுலைபிப்பை மணமகனாக ஏற்கிறேன்" என்ற போது அப்பெண்ணின் பெற்றோர் மட்டுமல்ல, நாமும் கொஞ்சம் ஆடித் தான் போவோம். ஆடிப் போகும் உள்ளங்களுக்காகவே அப்பெண் கீழ் வரும் குரானின் வசனத்தை ஓதி காண்பித்தார்.
"மேலும்அல்லாஹ்வும் அவனுடைய தூதரும் ஒரு காரியத்தைப்பற்றிக் கட்டளையிட்டு விட்டால்அவர்களுடைய அக்காரியத்தில் வேறு அபிப்பிராயம் கொள்வதற்கு ஈமான் கொண்டுள்ள எந்த ஆணுக்கோ பெண்ணுக்கோ உரிமையில்லை..." (33:36).
அப்பெண்ணின் முடிவை அறிந்த அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அப்பெண்ணின் வாழ்வு சிறக்க இறைவனிடம் பிராத்தித்தார்கள். தாம் திருமணம் முடிக்க நினைக்கும் ஆடவனிடத்தில் அவன் தலைமுடியையும், நிறத்தையும், செல்வத்தையும், அழகையும் பார்க்கும் அளவு கூட மார்க்கத்தை பார்க்கா நமக்கு மத்தியில் திருத்தூதரின் தேர்வு என்பதால் தம் சுய விருப்பு வெறுப்புகளை ஒதுக்கி ஜுலைபிப்(ரலி) பை மணமகனாக ஏற்ற அப்பெண்ணின் தியாகம் உண்மையில் அர்ப்பணிப்பின் உச்சகட்டம். நபிகளாரின் சிறப்பு பிராத்தனைக்கு உரித்தான அப்பெண்ணின் வாழ்வு ஜுலைபிப் (ரலி) இறக்கும் வரை மனமொத்து சிறப்பாய் இருந்ததை வரலாற்றில் பார்க்கின்றோம்.

ஒரு போர்களத்தில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் படையினரை பார்த்து அவர்கள் யாரையாவது போரில் இழந்து விட்டனரா என்று விசாரிக்க தாங்கள் யாரையும் இழக்கவில்லை என்று தோழர்கள் பதிலளித்தனர். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) "நான் ஜுலைபிப்பை இழந்து விட்டேன். அவரை களத்தில் தேடுங்கள்" என்றார்கள். தோழர்கள் சென்று தேடிய போது ஜுலைபிப் உதிரம் சொட்ட இறந்து கிடந்தார். அவரை சுற்றிலும் ஏழு எதிரிகள் இறந்து கிடந்தனர். ஏழு எதிரிகளை கொன்று ஜுலைபிப் (ரலி) ஷஹீதாகி கிடந்தார்.

ஜுலைபிப்பை பார்த்து அல்லாஹ்வின் தூதர் (ஸல்) நெகிழ்ந்து "ஜுலைபிப் என்னுடையவர், நான் அவருடையவர்" என்பதை திரும்ப திரும்ப கூறினார்கள். பின் தம் கரங்களாலேயே ஜுலைபிப்பை ஏந்தி சென்றதோடு தாமே குழி தோண்டி ஜுலைபிப் (ரலி) அவர்களை புதைத்து ஜனாஸா தொழுகை தொழ வைத்தார்கள். யாருக்கு கிடைக்கும் இப்பெரும்பேறு.
உடலிலோ, அந்தஸ்திலோ சிறு குறை ஏற்பட்டாலும் துவண்டு துறவியை போல் வாழும் நம்மவர்கள் உருவம் சிறுத்தாலும் தம் செயலால் உயர்ந்து நின்ற ஜுலைபிப் (ரலி) வாழ்வை படிப்பதோடு வாழ வேண்டும். அல்லாஹ்வின் தூதர்(ஸல்) சும்மாவா சொன்னார்கள்ஜுலைபிப் என்னுடையவர், நான் அவருடையவர்" .

ஜுலைபிப் ரலியல்லாஹு அன்ஹீ

No comments: