Wednesday, October 21, 2015

லகும் தீனுகும் வலியத்தீனும் மத சார்பின்மையும்


 
இஸ்லாமிய தீவிரவாதம் எனும் சொல்லாடலை போல் லகும் தீனுகும் வலியத்தீனுக்கும் மத சார்பின்மைக்கும் உள்ள உறவு தொடர்பற்றதை போல் தோன்றினாலும் இன்றைய முஸ்லீம் சமூகத்தில் இரண்டுக்கும் மத்தியில் அழுத்தமான உறவு நிலவுகிறது. சொல்லப்போனால் இரண்டையும் எப்படி புரிந்து கொள்ள வேண்டுமோ அதற்கு நேர்மாற்றமாகவே சமூகம் புரிந்து வைத்துள்ளது என கருதுவது பிழையானதன்று.

எவ்வாறு விளங்கி வைத்துள்ளோம் ?

சூரத்துல் காபிரூன் அத்தியாத்தின் இறுதி வசனமான லகும் தீனும் வலியத்தீன் என்பதற்கு நேரடி அர்த்தம் "உங்களுக்கு உங்கள் மார்க்கம், எங்களுக்கு எங்கள் மார்க்கம்". இதை முஸ்லீம் சமூகம் அல்லாஹ்வே அவர்கள் அவர்களுடைய மார்க்கத்தை பின்பற்றட்டும். நாம் நம்முடைய மார்க்கத்தை பின்பற்றுவோம். மார்க்கத்தில் கட்டாயம் இல்லை என்று வேறு குர் ஆனில் அல்லாஹ் சொல்லியிருக்கிறான் என்ற ரீதியில் மதசார்பின்மைக்கு எடுத்துக்காட்டாக இவ்வசனத்தை பயன்படுத்துகின்றனர்.

தஃவாவே தேவையில்லை

அழைப்பு பணி செய்ய சிரமப்படும் சகோதரர்கள் அழைப்பு பணி ஒன்றும் அவ்வளவு அத்தியாவசிய அவசர பணி அல்ல என்பதை நிறுவ இவ்வசனத்தை துணைக்கு அழைத்து கொள்கின்றனர். இன்னும் சில சகோதரர்கள் அழைப்பு பணி வேண்டும், ஆனால் சிறுபான்மை நாட்டில் தீனை நிலை நாட்டும் பணி தேவையில்லை என்பதற்கும் இவ்வசனத்தை உபயோகப்படுத்தி கொள்கின்றனர்.

மதசார்பின்மையில் தங்கியுள்ளதா நமது வெற்றி

இஸ்லாத்தை ஓரளவு விளங்கி பின்பற்றும் சகோதரர்கள் கூட இந்தியா போன்ற மதசார்பற்ற நாட்டில் நாம் மதசார்பின்மைக்கு எதிராக நடப்பது ஆர்.எஸ்.எஸ் சங் பரிவாரங்களின் வெறிக்கு துணை போவதாக அமையும் என்றும் மதசார்பின்மை வாதிகளின் வெற்றியிலேயே நமது வாழ்வு தங்கியுள்ளது என்றும் நம்புகின்றனர். அதனால் தான் தாத்ரியில் மாட்டுக்கறி தின்றிருக்கலாம் எனும் சந்தேகத்தில் முஸ்லீம் முதியவர் அக்லாக் இந்து வெறியர்களால் அடித்து கொள்ளப்பட்ட போது இந்துத்துவாவை எதிர்க்கும் எழுத்தாளர்கள் இந்து அடிப்படை வாத குழுக்களால் கொல்லப்படும் போதோ, சட்டமன்ற உறுப்பினரே மாட்டு கறி பிரியாணி பரிமாறியதற்காக பாஜக சட்டமன்ற உறுப்பினர்களாலேயே அடிக்கப்பட்ட போதும் வாய் திறக்காமல் இருந்தாலும் நம்மவர்கள் மாத்திரம் உலகில் எங்கு குண்டு வெடிப்பு நடந்தாலும் பாகிஸ்தான் துப்பாக்கி சூடு நடத்தினாலும் உடனே அதை கண்டித்து தாங்கள் தேசப்பற்றாளர்கள் என்று நிரூபிக்கும் இரண்டாம் தர குடிமக்கள் மன நிலையில் உள்ளார்கள்.

வசனத்தின் பிண்ணணி

நம்மில் பலர் விளங்கி வைத்திருப்பதை போல் மத சார்பின்மைக்கு ஆதரவாக அவ்வசனம் இறக்கப்படவில்லை. மாறாக இறைவனின் இறுதி தூதர் சத்திய இஸ்லாத்தை அம்மண்ணில் நிலை நாட்டிட எல்லா விதமான முயற்சிகளும் மேற்கொண்டிருந்தார்கள். அம்முயற்சியை முறியடிக்கும் விதமாக குறைஷி குப்பார்கள் மிரட்டல், ஆசை வார்த்தைகள் என்று பல்வேறு உபாயங்களை கையாண்டார்கள். மக்கத்து ஆட்சியை தருவதாகவும், அழகான பெண்ணை மணமுடித்து தருவதாகவும், செல்வ குவியல்களை கொட்டுவதாகவும் சராசரி மனிதனை சபலப்படவைக்கும் அத்துணை சமரச திட்டங்களையும் முன் வைத்தார்கள். ஆனால் அல்லாஹ்வின் தூதரோ எவ்வித சமரசத்துக்கும் இடம் கொடுக்காமல் குப்பார்கள் ஒரு கையில் சூரியனையும் இன்னொரு கையில் சந்திரனையும் கொடுத்தாலும் இப்பாதையில் தமது உயிர் போகும் வரை அல்லது மார்க்கம் மண்ணில் மிகைக்கும் வரை தனது பணி தொடரும் என்று தெளிவாக மொழிந்தார்கள்.


இச்சூழலில் தான் குப்பார்கள் இன்னொரு திட்டத்தை முன் மொழிகிறார்கள். அது என்னவெனில் அவர்கள் வணங்கும் லாத் உஸ்ஸா போன்றவற்றை முஹம்மது (ஸல்) குறிப்பிட்ட காலம் வணங்கினால், தாங்கள் அல்லாஹ்வை வணங்குவோம் என்று சொல்கிறார்கள். அப்போது தான் இவ்வத்தியாயத்தை அல்லாஹ் இறக்குகிறான். அம்மடையர்கள் சொல்வதை போல் அவர்களுடைய தெய்வத்தை நீங்கள் வணங்க முடியாது, உங்களுடைய தெய்வத்தை அவர்கள் வணங்க முடியாது, உங்களுக்கு உங்கள் மார்க்கம், எனக்கு எனது மார்க்கம் என பதிலளிக்க சொல்கிறான்.

இஸ்லாமும் மதசார்பின்மையும் வெவ்வேறானவை

எனவே இவ்வசனம் மதசார்பின்மையையோ மதசகிப்புதன்மையையோ போதிப்பதற்காக வரவில்லை. மாறாக சிலைகளை வணங்குபவர்களால் அல்லாஹ்வை வணங்குவதோ அல்லாஹ்வை வழிபடுபவர்கள் சிலைகளை வழிபடுவதோ முற்றிலும் முடியா விஷயம் என்பதை ஆழ உணர்த்துகிறது. ஒருவர் முஸ்லீமாக இருந்து கொண்டே காபிராகவும் இருக்க இயலாது. ஏனெனில் இரண்டின் வழிமுறையும் வெவ்வேறானவை.

இன்னும் சொல்லப்போனால் இஸ்லாம் எக்காலத்திலும் ஜாஹிலிய்யாவுடன் ஒன்று சேராது என்பதை பறை சாற்றும் போர் முழக்கமாகவே லகும் தீனுகும் வலியத்தீன் பார்க்கப்பட வேண்டுமே அன்றி வேறு வடிவத்தில் அல்ல. இஸ்லாம் என்பது சிலை வணக்கம்,  மதசார்பின்மை உள்ளிட்ட மனித மனோ இச்சைகளால் உருவாக்கப்பட்ட மதசார்பின்மை போன்ற இசங்களோடு எக்காலத்திலும் சமரசமாகாது. அவைகளை வீழ்த்தி இஸ்லாத்தை மிகைக்க செய்யவே தூதர்களை அனுப்பினோம் என்று அல்லாஹ் கூறுவதற்கேற்ப இஸ்லாத்தை கலப்பற்ற முறையில் விளங்கி நடைமுறைப்படுத்துவோம். இஸ்லாத்துக்கு முழுமையாய் சான்று பகர இயலா பலவீனமானவர்களாக நாம் இருப்போமானால் குறைந்த பட்சம் ஜாஹிலிய்யாவிற்கு வெண் சாமரம் வீசாமல் இருக்க கூடிய ஈமானையாவது அல்லாஹ் நமக்கு வழங்குவானாக.

No comments: